Exclusive Nri News Around the World

EIFF ஷார்ஜாவில் நடத்திய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி! முனைவர் பேரா. மன்சூர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு!


எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 27, 2013 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து அமீரகம் வந்துள்ள ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பேரா. P.M. மன்சூர் வர்கள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். ஷார்ஜாவிலுள்ள பாக் காஸி ரெஸ்டாரண்டில் சரியாக இரவு 7.00 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி அப்துல் மாலிக் கிராஅத் ஓதினார். EIFF பொருளாளர் நிலாமுத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். EIFF பற்றிய அறிமுக உரையை M.S. அப்துல் ஹமீது நிகழ்த்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சாரம், மருத்துவமனைகளில் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், ரத்ததான முகாம்கள், இலவச மருத்துவ முகாம்கள், ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடத்தப்படும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பணியாளர்களுக்குச் சட்ட உதவிகள் போன்ற அமீரகத்தில் EIFF ஆற்றி வரும் பல்வேறு சமூகப் பணிகளை அவர் எடுத்துரைத்தார். பின்னர் முனைவர் பேரா. மன்சூர் அவர்கள் சிறப்புரையாற்றினார். பேரா. மன்சூர் அவர்கள் 1971ல் ஜமால் முஹம்மத் கல்லூரியில் பேராசிரியராக இணைந்து, 2007ல் துணை முதல்வராக இருந்த நிலையில், 36 வருடங்கள் கழித்து பணி ஓய்வு பெற்றார். தற்பொழுது M.I.E.T. கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். தன் பணிக் காலத்தில் இரண்டு முறை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். 1984ல் “கைக்கூலி கைவிட்டோர் கழகம்” (Anti Dowry Association) என்ற அமைப்பை ஆரம்பித்ததை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறார். இதன் மூலம் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று வரதட்சணை வாங்காமல் திருமணம் முடித்ததை நினைவு கூர்கிறார். “கடலில் மிதக்கும் நிலா” என்ற கவிதை நூல் உட்பட 5 நூல்கள் இதுவரை எழுதியுள்ளார். மாணவர்களை ரத்த தானம் வழங்க ஊக்குவித்து, தமிழகத்திலேயே அதிகமாக ரத்த தானம் வழங்கும் கல்லூரியாக ஜமால் முஹம்மத் கல்லூரியை மாற்றிக் காட்டியுள்ளார். அவரது சிறப்புரையில், சச்சார் கமிஷன் அறிக்கையைச் சட்டிக்காட்டி, இந்திய முஸ்லிம்களின் அவல நிலையை விளக்கிப் பேசினார். ஆசிரியர் பணி என்பது மாணவர்களை தேர்வுக்கு மட்டும் உருவாக்குவது அல்ல, அவர்களுக்கு மனித மாண்புகளைக் கற்றுக் கொடுத்து மனிதர்களாக மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். பல்வேறு வாழ்க்கைச் சூழல்களை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாணவர்களை திருச்சி பாலக்கரையிலுள்ள சேரிப் பகுதிக்கும், முதியோர் காப்பகங்களுக்கும் அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், அங்கே மாணவர்கள் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைப் பார்த்ததாகக் கூறினார். சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், திருமதி இந்திரா காந்தி ஒற்றை பெண் குழந்தை உயர்நிலை பட்டப்படிப்பு உதவித் தொகை குறித்து விளக்கினார். ஒரு வருடத்திற்கு ரூ. 20,000 வைத்து இரண்டு வருடங்களுக்கு ரூ. 40,000 ஒரு மாணவிக்கு அரசு உதவித் தொகையாக வழங்குகிறது என்றும், அதைப் பெறுவதற்கு ஒரே நிபந்தனை அந்த மாணவி அந்தக் குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தான் பணியில் இருக்கும்பொழுது மாணவிகளுக்கு இதனை வாங்கிக் கொடுத்ததாகக் கூறினார். குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வியையாவது நம் சமுதாயக் கண்மணிகள் வறுமை காரணமாக துண்டிக்காது கற்க நாம் உதவி புரிய வேண்டும் என்றும், நம்மால் மாதாமாதம் இதற்காக ஒரு சிறு தொகையைக் கூட ஒதுக்க முடியாதா என்ற கேள்வியையும் முன் வைத்தார். கல்வியில் பின்தங்கியுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை மேம்படுத்த பல்வேறு விதமான ஆலோசனைகளையும், தனது வாழ்வில் நடந்த பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் பேராசிரியர். கல்வியில் சமூகத்தைச் சக்திப்படுத்த EIFF அமீரகத்திலிருந்து தாயகத்தில் உள்ள சிறுபான்மையினருக்குச் செய்யும் உதவிகளைப் பாராட்டிய பேராசிரியர் அவர்கள், அதற்கு தான் என்றும் துணை நிற்பதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக பொறியாளர் தமீம் அவர்கள் “கல்விப் பணியில் கள அனுபவங்கள்” என்ற தலைப்பில் அழகுற உரை நிகழ்த்தினார். குழந்தைகளின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக் கூடாது என்றும், அது இஸ்லாத்திற்குப் புறம்பானது என்றும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பெருநாள் சமயத்தில் ஓர் அனாதைச் சிறுவனை ஆதரித்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிப் பேசினார். “பள்ளி செல்வோம்” (ஸ்கூல் சலோ) என்ற முழக்கம் தற்போது இயக்கமாக மாறி, மாபெரும் வெற்றி பெற்றுள்ளதையும், அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் இதில் பெரும் பங்காற்றிட முடியும் என்பதையும் கூறிய தமீம், திருச்சியில் இந்தப் பிரச்சாரம் எவ்வாறு துளிர் விட்டு, மரமாக மாறியது என்பதைத் தன் அனுபவம் மூலம் விளக்கினார். EIFF பொருளாளர் நிலாமுத்தீன் முனைவர் மன்சூர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இறுதியாக, நன்றியுரையை முஹம்மத் ஸியாத் நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. மொத்த நிகழ்ச்சியையும் M.S. அப்துல் ஹமீது தொகுத்து வழங்கினார்.

- அபுதாபியிலிருந்து கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2014 All Rights Reserved vvonline.in