Exclusive Nri News Around the World

கலைச்சங்கமம் 2010

துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கலைச்சங்கமம் 2010 நிகழ்ச்சி அமீரகத்தில் முதல் முறையாக 05.11.2010 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இந்தியப் பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் சி.சுப்ரமணியன் மற்றும் பி. கக்கன் ஆகியோரது நூற்றாண்டு நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது. கலைச்சங்கமம் 2010 நிகழ்வினை தமிழக சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், நடிகைகள் நளினி, சுதா சந்திரன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்தும், அமீரக தேசிய கீதமும் பாடப்பட்டது. வசந்த் திருக்குறளைப் படித்து அதன் விளக்கவுரையினை வாசித்தார். துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் முனைவர் அறிவொளி அவர்களை நடுவராக கொண்டு ’இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது குடும்பச் சோலையா ? அல்லது கல்விச் சாலையா ? எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருந்தது. குடும்பச்சோலை எனும் அணியில் ராஜாபாளையம் உமாசங்கர். கோகுல், ராஜேஷ் குமார் ஆகியோரும், கல்விச் சாலை எனும் அணியில் கோவில்பட்டி அன்ன பாரதி, ஸ்வேதா, ரோஷினி ஆகியோரும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட சி. சுப்ரமணியன், நேர்மையான அரசியல்வாதியாக எளிமையுடன் வாழ்ந்த பி. கக்கன் உள்ளிட்ட தலைவர்களை மறந்து விட்ட சூழலில் அத்தகைய தலைவர்களை நினைவு கூர்ந்து விழா எடுத்துச் சிறப்பித்த அமீரகத் தமிழர்களின் அமைப்பாக செயல்பட்டு வரும் துபாய் தமிழ்ச் சங்கத்தைப் பாராட்டினார். முன்னதாக ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம் ஸலாஹுத்தீன் உரை நிகழ்த்தினார். நடிகை சுதா சந்திரன் நடனம், கவிதா பிரசன்னா குழுவினரின் நடன நிகழ்ச்சி, சந்திரா கீதாகிருஷ்ணன் குழுவினரின் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன. சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளுக்கு நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்க‌ப்பட்ட‌து. நிகழ்வில் பங்களிப்பு செய்தோருக்கு நினைவுப் பரிசினையும், குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகளுக்கு நடிகை நளினி பரிசு வழங்கிப் பாராட்டினார். இந்திய தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்வினை மீரா கிரி மற்றும் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்புற செய்திருந்தனர். அமீரகத்தில் தீபாவளியன்று நடைபெற்ற இப்பிரமாண்ட நிகழ்ச்சி தீபாவளியினைக் கொண்டாடிய உணர்வினை ஏற்படுத்தியதாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

- Kamal Basha

Back to Nri News Home

© Copyright 2010 All Rights Reserved vvonline.in