Exclusive Nri News Around the World

அமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்'

’கணினியில் தமிழைப் பரப்புவதை’ கடந்த 12 ஆண்டுகளாக அமீரகத் தமிழர்களிடையே நிகழ்த்தி வரும் அமீரகத் தமிழ் மன்றம் தனது உறுப்பினர்களுக்காக ஒன்று கூடல் நிகழ்ச்சியொன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. விரிவடைந்து வரும் அமைப்பில் உறுப்பினர்களுக்கிடையே நன்னம்பிக்கையையும் நெருக்கத்தையும் உருவாக்கும் வண்ணம் நாள் முழுக்க பல்வேறு விதமான சுவாரஸ்யமான போட்டிகள் விளையாட்டுகள் கேளிக்கை நிகழ்ச்சிகள் என ஒருநாள் முழுக்க நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துவது அமீரகத் தமிழ் மன்றத்தின் வாடிக்கை இயந்திரமயமான பெருநகர் சூழலில் இறுக்கம் தளர்ந்து அனைவரும் ஒன்று கூடி மகிழும் இந்த மனமகிழ்ச்சி கூடலுக்கு ‘இந்தநாள் இனிய நாள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அமீரகத் தமிழ் மன்றத்தின் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை துபாயில் அமைந்துள்ள முஷ்ரிஃப் பூங்காவில் இதற்காக ஒன்று கூட திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள், சிறுவர் சிறுமியர் பெண்கள் ஆண்கள் எனத் தனித்தனிப் பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் அனைவரும் கலந்து கொள்ளும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் மட்டுமில்லாமல் காலை சிற்றுண்டி மதிய உணவு மாலை தேநீர் என நாள் முழுவதற்குமான அனைத்து வகை ஏற்பாடுகளையும் அமீரகத் தமிழ் மன்றத்தினர் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சி மேலும் சிறப்பானதாக அமையுமென தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலதிக விபரங்களுக்கு 050 344 53 75 என்ற செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.

- ஜெஸிலா, அமீரகத் தமிழ் மன்றம்

Back to Nri News Home

© Copyright 2011 All Rights Reserved vvonline.in